ஷா ஆலம், ஆக. 26 - கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள லோட் குடியிருப்புகளில், சாலைகளை சீரமைக்க தொகுதி சேவை மையம் இவ்வாண்டு இதுவரை 400,000 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
மாரிஸ் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை தரவு தகவல் முறை திட்டத்தின் கீழ் புக்கிட் கெமுனிங் 8வது மைல் பகுதியில் உள்ள எட்டு லாட் குடியிருப்புகளில் தலா 50,000 வெள்ளி செலவில் இச்சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
கடந்தாண்டு 50,000 வெள்ளி செலவில் ஒரு லோட் சாலை சீரமைக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஒன்பது சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு சாலையை சீரமைப்பதற்கு மாவட்ட நில அலுவலகத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலைகள் சீரமைக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று குண்டும் குழியுமாகக் காணப்பட்ட இச்சாலைகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இச்சாலைகள் சீரமைக்கப்பட்டதன் வழி லோட் நிலக் குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறிய அவர், சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய கனரக வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் வெ.400,000 செலவில் லோட் நில சாலைகள் சீரமைப்பு
26 ஆகஸ்ட் 2025, 8:38 AM