ஷா ஆலம், ஆக. 26 - பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியின் 80ஆம் ஆண்டு போட்டி விளையாட்டு கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாய்டு தொடக்கி வைத்தார்.
கடந்த எண்பது ஆண்டுகளாக இப்பள்ளியில் நடத்தப்பட்டு வரும் போட்டி விளையாட்டுகள் மாணவர்கள் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்குரிய களமாக விளங்குவதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இத்தகைய போட்டி நிகழ்வுகள் மாணவர்களின் ஆற்றலை வளர்க்கும் அதேவேளையில் கட்டொழுங்கு, குழுவாக செயல்படும் பக்குவம், மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை ஆகியவற்றையும் ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு இன்றி மாணவர்களின் வெற்றி எந்த துறையிலும் சாத்தியமாகாது. அதே போல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றார் அவர்.
இந்த போட்டி விளையாட்டு நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் வாயிலாக மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைளிலும் சிறப்பான வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.