ஷா ஆலம், ஆக. 26 - கடந்த 2021 முதல் 2025 ஜூலை மாதம் வரை சிகிரெட் மற்றும் வேப் எனப்படும் மின் சிகிரெட் மூலம் அரசாங்கம் 1,530 கோடி வெள்ளியை வரியாக வசூலித்துள்ளது.
அக்காலக்கட்டத்தில் சிகிரெட் வாயிலாக மட்டும் 1,502 கோடி வெள்ளி வசூலிக்கப்பட்டதாக மக்களையில் இன்று வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் நிதியமைச்சு கூறியது.
தாசேக் குளுகோர் உறுப்பினர் டத்தோ வான் சைபுல்ருடின் வான் ஜான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
சிகிரெட்டுகளுக்கான வரியுடன் மின் சிகிரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் வசூலிக்கப்பட்டத் தொகையின் ஒப்பீடு குறித்து வான் ஜான் கேள்வியெழுப்பியிருந்தார்.
சிகிரெட்டுகள், நிக்கோடின் அடங்கிய மற்றும் நிக்கோடின் இல்லாத வேப் திரவம் ஆகியவை ‘தரம் இறக்கப்பட்ட பொருள்களாக‘ வகைப்படுத்தப்பட்டு அவை கலால் வரி, இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரிக்கு உட்படுத்தப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
மின் சிகிரெட்டுகளில் பயன்படுத்தப்படும் நிகோடின் திரவத்திற்கு கடந்த 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒரு மில்லி லிட்டருக்கு 40 காசு என கலால் வரி விதிக்கப்படுகிறது.
மின் சிகிரெட மற்றும் மின் சிகிரெட் அல்லாத உபகரணங்களுக்கு பத்து விழுக்காடு கலால் வரி விதிக்கப்படுகிறது என்றும் அது கூறியது.