அலோர் ஸ்டார், ஆக. 25 - போலீஸ்காரர் ஒருவரை படுகொலை செய்ததாக நான்கு ஆடவர்களுக்கு எதிராக இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் எலியானா இஸ்மாயில் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக முகமது பத்ரி முகமது அஜாமி (வயது 24),
முகமது ஹபீஸ் கஸ்லி (வயது 26), பத்ரி இமான் அப்துல் நாசீர் (வயது 25) மற்றும் முகமட் சைபுவான் முகமட் நூர் ( வயது 34) ஆகியோர் தலையசைத்தனர்.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கெடா மாநில காவல் துறை தலைமையக குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த கார்ப்ரல் முகமட் ஹபிசுல் இஷாம் மஸ்லான் (ஸயது 35) என்பவரை கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி பிற்பகல் 3.43 மணிக்கு தாமான் கோல்ஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் கூட்டாகக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படி வழங்க லகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் கீழ் சேர்த்து வாசிக்கப்படும் 34 வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் கெடா மாநில அரசு வழக்குரைஞர் இயக்குநர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் ஹலீம் வழக்கை நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் சார்பிலும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.
இந்த வழக்கை நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.
போலீஸ்காரரை படுகொலை செய்ததாக நான்கு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
25 ஆகஸ்ட் 2025, 6:25 AM