கோலாலம்பூர், ஆக. 25 - பத்தாங் காலி, ஜாலான் ஈப்போவில் உள்ள பெரோடுவா தொழிற்சாலையின் மின்கம்பி சேமிப்பு கிடங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த தொழிற்சாலையின் சுமார் 80 சதவீதம் பகுதி எரிந்து நாசமானது.
இத்தீவிபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கோல குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து முதல் இயந்திரம் காலை 5.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
பின்னர் புக்கிட் செந்தோசா மற்றும் ரவாங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்த 26 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
இரும்பினால் அமைக்கப்பட்ட 100x80 சதுர அடி அளவிலான ஏ பிரிவு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்த போது தீ ஏற்கனவே எரிந்து கொண்டிருந்தது என அவர் கூறினார்.
தீ விபத்து அதிகாலை 5.45 மணிக்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தீ முற்றிலுமாக அணைக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெரேடுவா தொழிற்சாலையின் மின்கம்பி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
25 ஆகஸ்ட் 2025, 4:17 AM