கோலாலம்பூர், ஆக. 25- மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக மடாணி அரசாங்கம் கூடுதலாக 10 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் நேற்றிரவு நடைபெற்ற "காஸாவுடன் மலேசியாகூ ஒன்றுகூடல்" மற்றும் பிரார்த்தனை நிகழ்வில் பேசிய நிதியமைச்சருமான அன்வார், பாலஸ்தீன மக்களின் நலனைப் பாதுகாப்பதில் நாட்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மடாணி அரசாங்கத்தின் சார்பாக நாங்கள் 10 கோடி வெள்ளியை அங்கீகரித்தோம். இன்றிரவு மலேசிய அரசாங்கம் பாலஸ்தீன மக்களுக்கு உதவ மேலும் 10 கோடி வெள்ளியை வழங்குகிறோம் என்று நான் அறிவிக்கிறேன் என்று ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றிய போது பிரதமர் கூறினார்.
பொருளாதார உதவி தவிர்த்து அரசாங்கம் பாலஸ்தீனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதோடு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மலேசியாவிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
முதியவர்களையும் நோயாளிகளையும் இரண்டு விமானங்களில் இங்கு அழைத்து வந்தோம்.சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பிவிட்டனர். இங்கு வசிக்கும் பிள்ளைகளுக்கு நாங்கள் கல்வி வாய்ப்புகள், வசதிகள் மற்றும் உதவிகளை வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.
பாலஸ்தீன மக்களுக்கு மேலும் 10 கோடி வெள்ளி உதவி நிதி - பிரதமர் அறிவிப்பு
25 ஆகஸ்ட் 2025, 4:08 AM