கோலாலம்பூர், ஆக. 22 - கெஅடிலான் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் மகன் மீது இம்மாதம் 13ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் போலீசார் 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் ரபிஸியின் குடும்ப உறுப்பினர்கள், கார் ஓட்டுநர், பணியாளர்கள் மற்றும் இதர சாட்சிகளும் அடங்குவர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.
இது தவிர, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக இன்று இங்குள்ள புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அதே சமயம், ரபிஸியின் மகனின் உடலில் செலுத்தப்பட்ட திரவம் தொடர்பான மருத்துவனையின் இரசாயன அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான அந்த 12 வயதுச் சிறுவனின் உடல் நிலை ‘தற்போது சீராக உள்ளதாகவும் அவனது உடல் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
இதனிடையே, அச்சுறுத்தும் வகையிலான தொலைபேசி அழைப்பை தாம் பெற்றதாக ரபிஸியின் மனைவி கூறியிருந்தது தொடர்பில் கருத்துரைத்த அவர், அந்த தொலைபேசி எண் அந்நிய நாட்டுப பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தொடர்புடைய நபரை அடையாளம் காணும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவிலுள்ள பேராங்காடி ஒன்றின் பயணிகளை ஏற்றி இறக்கும் இடத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் ரபிஸியின் மகனுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவன் அந்த சிறுவனை இழுத்து அவனது உடலில் திரவத்தை ஊசி வழி செலுத்தியதாக ரபிஸி கூறியிருந்தார்.