ஷா ஆலம், ஆக. 22 - அண்மையில் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இரு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இரண்டு ஆடவர்கள் மீது இன்று இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
நீதிபதி நூருல் மர்டியா முகமது ரெட்ஸா முன்னிலையில் தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை
முகமது தவுபிக் ஹைகல் எடி பஸ்லி (வயது 22) மற்றும் முகமது எஸ்கில் முகமது நோர் (வயது 29) ஆகியோர் மறுத்து விசாரணை கோரினர்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் பாசீர் பெனாம்பாங்கில் உள்ள ஒரு கடல் உணவு விற்பனை நிலையத்தில், உள்ளூர் நபர் ஒருவரிடம் 700 வெள்ளி ரொக்கத்தை அவர்கள் இருவரும் கூட்டாகக் கொள்ளையிட்டதாக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
மறுநாள் நாள் அதிகாலை 6.45 மணியளவில் தஞ்சோங் காராங்கில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடையில் உள்ளூர் பெண் ஒருவரிடம் 600 வெள்ளியை கொள்ளையிட்டதாக அவர்களுக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 395வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கும் அதே வேளையில் கூடுதல் நிபந்தனையாக ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முகமது அசாமடின் ரசாக் பரிந்துரைத்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் எஸ். முத்துவீரன், தனது கட்சிக்கார்களுக்கு குறைந்த ஜாமீன் கோரி மனு செய்தார். நீதிமன்றம் முதல் குற்றச்சாட்டிற்கு 10,000 வெள்ளியும் இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 8,000 வெள்ளியும் ஜாமீன் வழங்கியது.
கோல சிலாங்கூர் வட்டாரத்தில் கொள்ளையில் ஈடுபட்டதாக இருவர் மீது குற்றச்சாட்டு
22 ஆகஸ்ட் 2025, 9:22 AM