ad

பல காரணங்களால் ஆசிரியர்கள் முன்கூட்டியே தங்களின் சேவையிலிருந்து விலகிக் கொள்கின்றனர்

22 ஆகஸ்ட் 2025, 8:11 AM
பல காரணங்களால் ஆசிரியர்கள் முன்கூட்டியே தங்களின் சேவையிலிருந்து விலகிக் கொள்கின்றனர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - ஆசிரியர் துறையில் இருப்பவர்கள் ஊதியம், சுதந்திரம், வேலைப்பளு, ஆரோக்கிய குறைப்பாடு ஆகியவற்றால் முன்கூட்டியே தங்களின் சேவையிலிருந்து விலகிக் கொள்வதாக நேற்றைய மக்களவையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை மிகக் குறைவான ஆசிரியர்களே தங்களின் பணிக்காலத்திலிருந்து முன்கூட்டியே விலகிக் கொள்வதாகக் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ் பாண்டியன் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 19,179 ஆசிரியர்கள் தங்களின் பணியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகக் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ நேற்று தெரிவித்திருந்தார்.

அந்த எண்ணிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டில் 5,306, 2023-இல் 6,394, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் முறையே 5,082 மற்றும் 2,397 ஆசிரியர்கள் முன்கூட்டியே தங்களின் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டனர்.

அவர்களில், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே அதிகமாகும் என்று பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் மிகக் குறைவான ஆசிரியர்களே முன்கூட்டியே தங்களின் பணியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறிய அவர், அதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார்.

"இப்போது சிலருக்கு அத்துறை மீதான் ஆர்வம் குறைந்துவிட்டது. முன்பு இருந்தது போல அல்ல. முன்பு போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணியாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அது மாறுபட்டு பல்வேறு பணிகளையும் பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய நிலைப்பாட்டில் ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர் பணி என்பது அலுவலப் பணி நேரம் போல் இருக்காது. சில வேளைகளில் நள்ளிரவு வரைக்கூட சில வேலை செய்து கொண்டிருப்பது மறுப்பதற்கில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், புறநகர்ப் பகுதிகளில் போதுமான வசதி நிறைந்த தமிழ்ப்பள்ளிகள் மிகவும் அரிதாக காணப்படும்.

இந்நிலையில், அத்தகையப் பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் குறிப்பாக புதியவர்கள், அதை ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டு பின்வாங்குவதாகவும் பாண்டியன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, குடும்ப சூழ்நிலையின் காரணமாகவே பெரும்பாலான இளவயது ஆசிரியர்கள் பணிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அதிலிருந்து விலகி வேறு வேலையைத் தேடிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சிலர் தங்களின் ஆசிரியர் பணிக்காகக் குடும்பத்தை விட்டு மிக தொலைவில் வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாவர். அதில் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி முன்கூட்டியே பணி ஒய்வு அல்லது பதவி விலகிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் ஆரோக்கிய குறைப்பாடுடன் இருப்பர். அவர்கள் தங்களின் நிலைப்பாட்டைக் கருத்தில் முன்கூட்டியே பதவி விலகிக் கொள்கின்றனர்," என்றும் அவர் விவரித்தார்.

அதிலும், சிங்கப்பூரில் கூடுதல் ஊதியம் கிடைப்பதாகக் கூறி தமக்கு தெரிந்த சில ஆசிரியர்களே, அங்கு சென்றிருப்பது, தமது கூற்றுக்கான தக்கச் சான்று என்றும் பாண்டியன் கூறினார்.

இவற்றைத் தவிர்த்து, மேலும் சிலர் ஆசிரியர் பணியில் ஏற்படும் அதிருப்தி காரணமாகவும் பணி விலகுவதை அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, அரசாங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினால் முழுமையான ஓய்வூதியம் பெறலாம் என்று அறிந்து வைத்திருக்கும் ஆசிரியர்கள், அறுபது வயதிற்கு முன்னரே அதாவது முழு ஓய்வூதியம் கிடைப்பதற்கான தங்களின் பணிக்காலத்தை நிறைவு செய்த பின்னர், முன்கூடியே பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாகவும் பாண்டியன் தெரிவித்தார்.

இருப்பினும், தமிழ்ப்பள்ளிகளில் இத்தகையப் பிரச்சனைகள் மிகக் குறைந்த அளவிலே இருப்பதாகக் கூறிய அவர், ஆண்டுதோறும் ஆசிரியர் துறைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, இளம் தலைமுறையினர் அத்துறை மீது கொண்டுள்ள அதீத ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.