கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - தமிழ்ப்பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் தொடர்பான திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தின் விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கும் ரமணன் பொறுப்பேற்க அண்மையில், கருவூல தலைமைச் செயலாளர் டத்தோ ஜொஹான் மமூட் மெரிகன் மூலம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து, கடந்த திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ கடிதத்தை தாம் பெற்றதாக, கெஅடிலான் கட்சியின் துணை தலைவரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன் உறுதிப்படுத்தினார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு முன்னதாக, இவ்வார இறுதி அல்லது அடுத்த வாரத்தில் பிரதமர் துறை மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தாம் திட்டமிட்டிருப்பதாக, அவர் கூறினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, KUSKOP-இன் துணை அமைச்சராக தாம் பதவியேற்றதிலிருந்து, இந்திய தொழில்முனைவோரை சமூக பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
-- பெர்னாமா