கோலாலம்பூர், ஆக. 21 - மாநகரின் மையத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் உள்ளூர் பயணச் சேவையில் ஈடுபட்ட மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பேருந்துகள் பல கடுமையான குற்றங்களைச் செய்திருப்பது அச்சோதனையில் கண்டறியப்பட்டதாக கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிடி ஆடாம் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு முன் காலாவதியான வரி (எல்.கே எம்.) மற்றும் கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் காலாவதியான கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மைய (புஸ்பாகோம்) சோதனை சான்றிதழ்களைக் கொண்டிருந்தது அக்குற்றங்களில் அடங்கும் என அவர் சொன்னார்.
அந்த மூன்று பேருந்துகளையும் உள்நாட்டு ஓட்டுநர்கள் செலுத்தினர். இக்குற்றங்களுக்காக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளின்படி ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் நகரவாசிகளை ஏற்றிச் செல்லும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு மீறலையும் ஜே.பி.ஜே. கடுமையாகக் கருதுகிறது என்று ஹமிடி வலியுறுத்தினார்.
சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது, பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைப்பை பராமரிப்பது ஆகியவற்றில் ஜே.பி.ஜே. கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த அமலாக்கம் உள்ளது என்று அவர் கூறினார்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை
MyJPJ செயலியின் e-Aduan போன்ற அதிகாரப்பூர்வ தளங்கள் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் தருமாறு ஹமிடி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
சாலை வரி இல்லாத மூன்று பேருந்துகள் பறிமுதல் - கோலாலம்பூர் ஜே.பி.ஜே. நடவடிக்கை
21 ஆகஸ்ட் 2025, 5:17 AM