கோலாலம்பூர், ஆக. 21 - தேசிய பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய உளவு பார்க்கும் செயல்களை முறியடிக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் ஃபார்முலா 1 (எஃப்.1) பந்தயத்தை மறுசீரமைக்கும் மலேசியாவின் ஆற்றல் ஆகியவை இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது, தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் அளவிற்கு நிகழும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான தடுப்பு மற்றும் தலையீட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு லுபோக் ஹந்து தொகுதி ஜி.பி.எஸ். உறுப்பினர் அராய் அங்காவ் ஜிங்கோய் உள்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்வார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியா மீண்டும் எஃப்1 பந்தயத்தை நடத்த முடியுமா என இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் சிபு தொகுதி பக்கத்தான் உறுப்பினர் ஆஸ்கார் லிங் சாய் பூ கேள்வியெழுப்புவார். நாட்டிற்கு பங்களிப்புகளையும் நன்மைகளையும் கொண்டு வரும் வகையில் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தடத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் அவர் வினவுவார்.
பிரதமர் துறை (சமய விவகாரங்கள்) அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான தாபோங் ஹாஜி நிறுவனத்தால் அமல்படுத்தப்பட்ட நேரடி பேச்சுவார்த்தை மூலம் கொள்முதல் செய்யும் நடைமுறை இன்னும் அமலில் உள்ளதா என்பதை தெரிவிக்குமாறு பெங்காலான் செப்பா பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது மர்சுக் ஷாரி பிரதமரிடம் கேட்பார்.
சரவாக்கின் கோவிட்-19க்குப் பிந்தைய மேம்பாட்டு உத்தி (பி.சி.டி.எஸ். 2030) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் புதிய கொள்கையில் சரவாக்கை உணவுப் பாதுகாப்பு மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து பாத்தாங் சோடோங் தொகுதி ஜி.பி.எஸ். உறுப்பினர் ரோடியா சபீ விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.
தொழிற்சாலைகளுக்கான இணைப்புச் சாலை மற்றும் வடக்கு துறைமுகப் பாதை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பணித்துறை அமைச்சரை காப்பார் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி கேட்டுக் கொள்வார்.
உளவு நடவடிக்கைகளைக் கையாள்வது, எஃப்1 பந்தயம் குறித்து மக்களவையில் இன்று விவாதம்
21 ஆகஸ்ட் 2025, 2:44 AM