புத்ராஜெயா, ஆக. 20 - மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பகடிவதை வழக்குகள் தொடர்பாக ஒரு விசாரணை ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டம் அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த உத்தேசத் திட்டத்தை பிரதமர் துறை (சட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்வார் என்று அவர் கூறினார்.
நாங்கள் அதனை அமைச்சரவையில் விவாதிப்போம் என்று இன்று நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம்
அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இந்த மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வில் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மற்றும் நிதி அமைச்சின் கருவூல பொதுச் செயலாளர் டத்தோ ஜோஹான் மாமுட் மரிக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சித்திரவதை வழக்குகளை விசாரிப்பதற்கு ஏதுவாக விசாரணை ஆணையத்தை நிறுவ வலியுறுத்தும் பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதன் அவசியத்தை அரசாங்கம் ஆராயும் என்று அசாலினா முன்னதாகக் கூறியிருந்தார்.
பகடிவதை குற்றங்களுக்கு தற்போது எந்தவொரு சட்ட விதியின் கீழும் குறிப்பிட்ட வரையறை அல்லது தெளிவான தண்டனை இல்லை என்று அவர் கூறினார்.
'பகடிவதை' என்ற வார்த்தை தண்டனைச் சட்டத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 507பி முதல் 507ஜி வரை திருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் நான் மிகவும் நிம்மதியடைகிறேன் என்று நேற்று ஒரு விழாவில் அசாலினா கூறினார்
சிறார் பகடிவதை வழக்குகளைக் கையாள விசாரணை ஆணையம் - அமைச்சரவை விவாதிக்கும்
20 ஆகஸ்ட் 2025, 4:00 AM