கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - தமிழ்ப்பள்ளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளை இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா விநியோகித்து வருகின்றது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இத்திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பலன்களை அளிப்பதை, மித்ராவின் கண்காணிப்பு அறிக்கை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து மடிக்கணினிகளையும் Google நிறுவனம் தனது சமூகநல கடப்பாடு (CSR) திட்டத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதுவரை 520 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6,000 கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி ரிங்கிட்டின் மூலம் இதுவரை 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் பயனடைந்திருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.
"ஆனால், இந்த 100 கோடி ஒதுக்கீடு சீன மற்றும் தேசிய பள்ளிகளுக்கு மட்டுமல்ல மாறாக தமிழ்ப்பள்ளிகளுக்கும் சேர்த்துதான் அந்த 100 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் 475 பள்ளிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் ரமணன்.
மேலும், மித்ரா மட்டுமே இந்தியர்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்கி வருவதாகக் கூறும் சிலரின் கருத்துகளை ரமணன் சாடினார்.
மாறாக, திவேட் எனப்படும் தொழில் பயிற்சி, STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை உட்பட தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் மூலம் இந்திய சமுதாயத்திற்கென பல திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக அவர் கூறினார்.
பெர்னாமா