ஷா ஆலம், ஆக. 20 - ஷா ஆலம் விளையாட்டு வளாக (கே.எஸ்.எஸ்.ஏ.) மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மலாவத்தி உள் அரங்கை இடிக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தப் பணி அடுத்தாண்டு தொடக்கத்தில் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன் பின்னர் நவீன விளையாட்டு வளாகத்தின் கட்டு பணிகள் தொடங்கும் என்றும் சிலாங்கூர் மந்திரபுசார் கழகம் (எம்.பி.ஐ.) அறிவித்துள்ளது.
வானிலை மற்றும் தளத்தின் சீரான செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இப்பணிகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் மக்களின் நல்வாழ்வு எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடைமுறைகள், தூசி கட்டுப்பாடு மற்றும் இரைச்சல் மேலாண்மை ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றுமாறு குத்தகையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அது கூறியது.
கே.எஸ்.எஸ்.ஏ.வின் மறு நிர்மாணிப்பு மாலாவத்தி அரங்கின் இடிப்பிலிருந்து தொடங்கி வரும் 2029 வரை மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும்.
இரண்டாம் கட்டத் திட்டத்தில் உள் அரங்கம், வணிக வளாகம், விளையாட்டுப் பிரிவு மற்றும் இளைஞர் பிரிவு ஆகியவவை நிர்மாணிக்கப்படும். இப்பணிகள் வரும் 2027 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2028 முதல் டிசம்பர் 2029 வரை மேற்கொள்ளப்படும் இறுதிக் கட்டத்தில் ஒருங்கிணைந்த முனையம் மற்றும் ஹோட்டல் ஆகியவை கட்டப்படும்.
40 விழுக்காட்டு பொது பொழுதுபோக்கு பகுதிகள், உள் விளையாட்டு மைதானங்கள், பல்நோக்கு அரங்குகள், ஹோட்டல்கள், பள்ளிவாசல், நிகழ்வு இடங்கள் மற்றும் விற்பனை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது மற்றும் வணிக வசதிகளை இந்த விளையாட்டு வளாகம் கொண்டிருக்கும்.
மேலும், 35,000 முதல் 45,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய புதிய அரங்கம் நவீன மற்றும் அனைத்துலக தர வடிவமைப்புடன் கட்டப்படும்.