கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - இன்று 2025 தேசிய தினம் மற்றும் மலேசிய தினம் நாடாளுமன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தேசிய மாதக் கொண்டாட்டம் மற்றும் ஜாலோர் கெமிலாங்கை பறக்கவிடும் பிரச்சாரத்தை துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முதன்மை நுழைவாயிலில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துலும் மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பெமீ அவாங் அலி பாசாவும் கலந்து கொண்டனர்.
காலை மணி 9.30 அளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தேசியப் பாடல் முதல் அங்கமாக அமைந்த நிலையில் அதனை அடுத்து தேசிய கோட்பாடு வாசிக்கப்பட்டது. பின்னர், "Malaysia MADANI Rakyat Disantuni" எனும் பாடல் இறுதியாகப் பாடப்பட்டது.
தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமாட் சாபு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி உள்ளிட்ட சில அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெர்னாமா