ad

போலீஸ் சோதனையில் மூவர் கைது - வெ.40 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

19 ஆகஸ்ட் 2025, 9:16 AM
போலீஸ் சோதனையில் மூவர் கைது - வெ.40 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

மலாக்கா, ஆக. 19 -  கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மலாக்காவில் கடந்த புதன் கிழமை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் ஆடம்பர  அடுக்குமாடி குடியிருப்பை சேமிப்பு மையமாகப் பயன்படுத்தி வந்த  போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார்  முறியடித்துள்ளனர்.

இச்சோதனைகளில்  41 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள சுமார் 94.84 கிலோ எடையுள்ள கஞ்சா உட்பட பல்வேறு வகையான போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்ததாகப்
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

மாலை 4.15 மணி முதல் 6.10 மணி வரை நடத்தப்பட்ட இந்த சோதனை  நடவடிக்கைகளில் 25 முதல் 46 வயதுடைய ஒரு பாகிஸ்தானியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் பகுதியில்  உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  நடந்த முதல் சோதனையில் உள்ளூர்வாசி ஒருவரையும் பாகிஸ்தானியரையும்  போலீசார் கைது செய்தனர். சந்தேக நபர்களையும் அவர்களது வாகனத்தையும் சோதனை செய்தபோது அதில்  26.73 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு  பிரிவில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளில் கஞ்சா மொட்டுகள், கெத்தமின் மற்றும் ஷாபு உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் கொண்ட ஒரு போதைப் பொருள்  சேமிப்பு வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று மலாக்கா காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இரண்டாவது சோதனையின் போது மூன்றாவது சந்தேக நபரான உள்ளூர்வாசி மலாக்காவின் ஆயர் மோலேக் பகுதியில்  கைது செய்யப்பட்டார். அவரது காரில் சோதனை நடத்தியபோது சுமார் 18.25 கிலோ எடையுள்ள ஹெராயின் மற்றும் பல்வேறு போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் கஞ்சா (94.84 கிலோ), கஞ்சா மொட்டுகள் (2.58 கிலோ), கெத்தமின் (42.23 கிலோ), ஷாபு (143 கிராம்), எராமின் 5 மாத்திரைகள் (810 கிராம்), மற்றும் ஹெராயின் பேஸ் (18.25 கிலோ) ஆகியவை அடங்கும்.

போதைப்பொருள்கள் தவிர்த்து  சுமார் 70,000  வெள்ளி மதிப்புள்ள ஒரு டோயோட்டா எஸ்டிமா, பெரோடுவா மைவி மற்றும்  ஆகிய இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 42.33 லட்சம் வெள்ளியாக உயர்ந்துள்ளது என்று ஹூசேன் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.