புது டில்லி, ஆக. 19 - சீனா மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எல்லை அமைதி, வர்த்தக விவகாரங்கள் மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணிய ஜெய்சங்கரும் சீன வெளியறவு அமைச்சர் வாங் யீயும் இன்று பேச்சு நடத்தினர்.
பொருளாதாரம் மற்றும் வர்த்தக விவகாரங்கள், யாத்ரீகர்கள், மக்களுக்கிடையிலான தொடர்பு, ஆறுகள் தொடர்பான தரவு பகிர்வு, எல்லை வர்த்தகம், இணைப்பு மற்றும் இரு தரப்பு பரிமாற்றம் தொடர்பில் தங்களுக்குள் ஆக்ககரமான கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜெய்சங்கர் கூறினார்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலையான, ஒத்துழைப்பு நிறைந்த முன்னோக்கிய நட்புறவை இந்த பேச்சுவார்த்தை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து நிலையிலான பரிமாற்றங்களும் கலந்துரையாடல்களும் படிப்படியாக நிலைப்பெற்று பரஸ்பர உறவு ஒத்துழைப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
ஒற்றுமையுடனும் வலுவுடனும் இருப்பதில் வளரும் நாடுகளுக்கு இவ்விரு பெரிய நாடுகளும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வாங் வலியுறுத்தினார்.
சீனாவும் இந்தியாவும் சரியான வியூக புரிந்துணர்வை உருவாக்க வேண்டும். தங்களை சக பங்காளிகளாகவும் வாய்ப்புகளாகவும் கருத வேண்டுமே தவிர பகையாளிகளாக அல்ல என்று வாங் கூறியதாக அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இரு நாள் பயணம் மேற்கொண்டு வாங் நேற்று புதுடில்லி வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் 24வது எல்லை பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வார்.
பின்னர் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார்.