ஷா ஆலம், ஆக. 19 - கிள்ளானில் சாலை, தெரு விளக்கு மேம்பாடு மற்றும் பராமரிப்பு திட்டங்களுக்காக கடந்தாண்டு 6 கோடியே 39 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டது. இந்நோக்கத்திற்காக இவ்வாண்டு இதுவரை கூடுதலாக 2.6 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டத் திட்டங்களில் 34 நடைபாதை பணிகள், 26 நடைபாதை அல்லாத திட்டங்கள், 14 பாலங்கள், வடிகால் பால பழுதுபார்ப்புகள் மற்றும் 41 தெருவிளக்கு மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு மேம்பாடுகள் ஆகியவை அடங்கும் என்றும் இத்திட்டங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துவிட்டதாகவும் பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டில் 14 நடைபாதை பணிகள், ஒன்பது நடைபாதை அல்லாத திட்டங்கள், மூன்று பாலம் மற்றும் மதகு பழுதுபார்ப்பு மற்றும் 15 விளக்கு மேம்பாட்டுப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 2025 நிலவரப்படி, நடைபாதை, நடைபாதை அல்லாத சாலைகள், பாலம் மற்றும் வடிகால் பாலங்களின் தொடர்ச்சியான பராமரிப்புக்காக அமைச்சு 2 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரால் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
தெருவிளக்கு மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பராமரிப்புக்காக மேலும் 14 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பொதுப்பணித் துறையால் கையாளப்படும் என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வப் பதிலில் தெரிவித்தார்.
நான்கு சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் தற்போது பல்வேறு கட்டங்களில் வளர்ச்சியில் உள்ளன. அவற்றில் ஒன்று வடிவமைப்பு நிலையிலும் மற்றொன்று கட்டுமானத்திலும் உள்ளன. மேலும் ஒன்று திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டது என்று நந்தா கூறினார்.