இஸ்தான்புல், ஆக. 19 - காஸாவில் செயல்படும் சமூக சமையலறைகள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கிய தினசரி உணவில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே தற்போது வழங்க முடிகிறது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
எண்பதுக்கும் மேற்பட்ட சமூக சமையலறைகள் கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமார் 380,000 உணவுகளை மட்டுமே வழங்க முடிந்தது என்று களத்தில் உள்ள சகாக்கள் தெரிவித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமூக சமையலறைகளால் தயாரிக்கப்படும் தினசரி உணவின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் பத்து லட்சத்தை தாண்டியது என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் "கடுமையான பட்டினி" காரணமாக ஒவ்வொரு நாளும் அதிகமான மரணங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் நிலைமை இப்போது " வரம்பு மீறிய பேரழிவு நிலையில்" இருப்பதாகவும் ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்ததாக டுஜாரிக் தெரிவித்தார்.
சிறார்கள் உள்பட பட்டினி தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. உணவு விநியோகிக்க முடிந்த அனைத்தையும் செய்யும்படி தனது குழுக்களுக்கு உலக உணவுத் திட்டம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பொருட்கள் "தேவையான அளவை விட மிகக் குறைவாகவே உள்ளன" என்றும் அவர் கூறினார்.
இறப்புகளைத் தவிர்ப்பதற்காக பெரிய அளவில் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து வழிகள் மூலம் தொடர்ந்து உணவை விநியோகிக்க மனிதாபிமானப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று டுஜாரிக் வலியுறுத்தினார்.
புகலிடங்களுக்கான ஐந்து மாத விநியோகத் தடையை நீக்கிய இஸ்ரேலின் அறிவிப்பை வரவேற்ற டுஜாரிக், எனினும், இந்த நடவடிக்கை காஸாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டங்களுடன் தொடர்புடையது என்று கவலை தெரிவித்தார்.