சைபர்ஜெயா, ஆகஸ்ட் 19 — அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடுதலாக RM100 (ஒரு முறை) உதவித் தொகையை வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஏதிர்வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்டில் இந்த விஷயம் உரிய பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
தேம்மு அன்வார் நிகழ்ச்சியின் போது மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் (MMU) மாணவர் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த முன்மொழிவுக்கு அவர் பதிலளித்தார்.
அன்வாரின் கூற்றுப்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மலேசியருக்கும் RM100 ரொக்க உதவியை அரசாங்கம் முன்னர் அங்கீகரித்திருந்தது.
"மாணவர் தலைவரின் முன்மொழிவை நான் வரவேற்கிறேன், அக்டோபர் பட்ஜெட்டில் நான் அதற்கு உரிய பரிசீலனை செய்வேன்" என்று அவர் கூறினார்.
வாழ்க்கைச் செலவு குறித்து பேசிய அன்வார், மலேசியாவில் சமையல் எண்ணெய், கோழி, முட்டை மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகக் குறைவாகவே உள்ளன என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
"கடுமையான வறுமை மற்றும் மக்கள் சுமக்கும் சுமை குறித்து நான் இன்னும் அதிகம் கவலைப்படுகிறேன். இவை நாம் முடிந்தவரை சிறப்பாகக் கையாள வேண்டிய விஷயங்கள் ஆகும். ஆனால் என்னை நம்புங்கள், சமீபத்தில் சம்பளத்தை உயர்த்தியபோது, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் மந்திரி புசார்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
அதிக சேமிப்பை அடைய ஒவ்வொரு அரசாங்க கொள்முதல் செயல்முறையும் வெளிப்படையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.