ஈப்போ, ஆக. 19 - வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் (பிளஸ்) 198.1வது கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் கமுண்டிங் அருகே இன்று அதிகாலை முட்டைகளை ஏற்றிச் சென்ற லோரி தர்பூசணி பழங்களை ஏற்றிச் சென்ற மற்றொரு லோரியின் பின்புறத்தில் மோதியதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 5.18 மணிக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து 16 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமது ஹனாபியா கூறினார்.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை மீட்க தீயணைப்பு படையினர் பல்வேறு சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
32 வயதுடைய ஓட்டுநர் இடிபாடுகளிலிருந்து வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் இறந்துவிட்டதை சம்பவ இடத்திலிருந்த சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கை அதிகாலை 6.52 மணிக்கு முடிந்தது.
டிரெய்லர் பின்புறம் லோரி மோதியது - ஓட்டுநர் பலி
19 ஆகஸ்ட் 2025, 3:21 AM