ஷா ஆலம், ஆக.19 - கோல சிலாங்கூர், ஈஜோக்கில் உள்ள கம்போங் ஸ்ரீ செந்தோசா மற்றும் கம்போங் ஸ்ரீ அமான் ஆகிய இடங்களில் செயல்படும் சட்டவிரோதக் குப்பை அழிப்பு மையங்கள் மற்றும் சட்டவிரோத நில சீராக்கப் பிரச்சனையைத் தீர்க்க கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மொத்தம் 313 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 24 குற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.கே.எஸ்.) வர்த்தக, சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு கூறியது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.
நில சீராக்கம் மற்றும் சட்டவிரோதக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் தரப்பினருக்கு எதிராக நகராண்மைக் கழகம் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி வாய்மொழி எச்சரிக்கைகள் மற்றும் குற்ற அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது.
சட்டவிரோத கழிவு கொட்டும் பகுதியை நகராண்மைக் கழகம் கடந்த 2016 ஆம் ஆண்டு மூடியதோடு வாகனங்கள் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க பள்ளத்தை தோண்டுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
அது தவிர, அந்தப் பகுதியின் நுழைவாயில் வேலி கதவு மற்றும் சட்டவிரோத குடிசைகளும் இடிக்கப்பட்டன என்று அவர் சிலாங்கூர் மீடியாவிற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்ட 51 நிலங்களை கோல சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் அடையாளம் கண்டுள்ள வேளையில் நில உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறி.
சிலாங்கூர் நிலம் மற்றும் கனிமவள இலாகா இயக்குநர் மூலம் அனைத்து அரசு நிறுவனங்களுக்கிடையிலான அமலாக்க நடவடிக்கைகளை மிகவும் முறைப்படுத்தப்பட்ட முறையில் ஒருங்கிணைக்க மாநில அரசு அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநில அரசின் உத்தரவு செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க நகராண்மைக் கழகம் சட்டவிரோத கழிவு மேலாண்மை தொடர்பான சிறப்பு பணிக்குழுவை நிறுவியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இப்பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை காண்பதற்காக நகராண்மைக் கழகம் நில உரிமையாளர்களுடன் கூட்டங்களை நடத்துவது மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது என்றார் அவர்.
ஈஜோக் சட்டவிரோதக் குப்பை அழிப்பு மையத்திற்கு 313 சம்மன்கள்- எம்.பி.கே.எஸ். வழங்கியது
19 ஆகஸ்ட் 2025, 3:18 AM