கோலாலம்பூர், ஆக. 19 - எஸ்.எஸ்.டி. பயனீட்டு வரிவிதிப்பு முறை மற்றும் பொருள், சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆகியவற்றின் நன்மை, தீமைகளைக் கருத்தில் கொண்ட பிறகு விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி.) விரிவாக்கப்பட்ட நோக்கத்துடன் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது.
வரிச்சுமை மிகவும் நியாயமாக விநியோகிக்கப்படுவதையும் ஆற்றல் உள்ளவர்கள் அந்த சுமையை ஏற்பதையும் உறுதி செய்வதற்காக எஸ்.எஸ்.டி. விரிவாக்க அமலாக்கம் இலக்கு மற்றும் முற்போக்கான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் கூறினார்.
ஜி.எஸ்.டி. யுடன் ஒப்பிடும்போது அமைப்பு தயார்நிலை, இலக்கிடப்பட்ட அணுகுமுறை மற்றும் விரிவான மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட தாக்கம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்ட முக்கிய பரிசீலனைகளில் அடங்கும் என அவர் சொன்னார்.
வரிவிதிப்பு நோக்கத்தை மிகவும் கவனத்துடன் நிர்ணயிப்பதன் மூலம் ஜி.எஸ்.டி.யுடன் ஒப்பிடும்போது மிகவும் முற்போக்கான அணுகுமுறையை மடாணி அரசாங்கம் எடுக்க எஸ்.எஸ்.டி. இடமளிக்கிறது என்று அவர் மக்களவையில் நேற்று நிதி அமைச்சின் 13வது மலேசிய திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றும் போது கூறினார்.
வரி விலக்கு மற்றும் அறவே வரியில்லா விகிதங்களின் பட்டியலை ஜி.எஸ்.டி. வழங்கினாலும் எஸ்.எஸ்.டி.யின் பொருள் மற்றும் சேவை பட்டியலுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அமீர் ஹம்சா விளக்கினார்.
இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் 500 கோடி வெள்ளியும் 2026ஆம் ஆண்டில் 1,000 கோடி வெள்ளியும் கூடுதல் வருமானமாகப் பெற முடியும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.
எஸ்.எஸ்.டி. வரி விரிவாக்கத்தின் வழி அதிகரிக்கும் வருமானம் மக்களின் நல்வாழ்வுக்கான சமூக வலையமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்யப் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவினச் சவால்களைச் சமாளிப்பதில் மக்களுக்கு உதவ ரொக்க உதவி உதவித் தொகை (எஸ்.டி.ஆர்.) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை (சாரா) ஆகியவற்றுக்கு கடந்த 2024இல் 1,000 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு அத்தொகை 1,500 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம் என்று அவர் கூறினார்.
ஜி எஸ்.டி யை விட எஸ்.எஸ்.டி. முற்போக்கானது- வரிச்சுமையை சமமாக பகிர்வதில் அரசு கவனம்
19 ஆகஸ்ட் 2025, 2:24 AM