கோலாலம்பூர், ஆக. 19 - ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை உயர்வு காண்பதற்கும் மூலப்பொருட்களின் விலை மற்றும் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு கருதுகிறது.
இத்தகைய நிலை இறக்குமதி பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளையில், மின்சாரம் மற்றும் மின்னியல், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், வாகனம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என அமைச்சு கூறியது.
இதன் தொடர்பில் நீடித்த வாழ்க்கை முறையையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு மறைமுக விளைவுகள் மீதும் அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தும்.
இதற்கான தணிப்பு நடவடிக்கையாக அரசாங்கம் அனைத்துலக விநியோக ஆதாரங்களை பல்வகைப்படுத்தவும் வெளிநாட்டு வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முக்கியமான மூலப்பொருட்களின் உள்ளூர் உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கவும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது என்று அவர் இன்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் அது தெரிவித்தது.
ஈரான்-இஸ்ரேல் ஆயுத மோதலின் தாக்கம் மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மையில், குறிப்பாக எரிசக்தி புவிசார் அரசியல், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மீதான அழுத்தம், இறக்குமதி பணவீக்கத்தின் ஆபத்து மற்றும் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் நிலைத்தன்மையில் ஏற்பட்ட தாக்கம் குறித்த அமைச்சின் மதிப்பீடு பற்றி கலாபாங்கான் தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர் டத்தோ எண்டி முகமது சூர்யாடி ஃபாண்டி எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
ஈரான்-இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கியமான உலகளாவிய எரிசக்தி ஏற்றுமதி வழிகளில் புவிசார் அரசியல் நிலைத்தன்மையை பாதிக்கும் சாத்தியத்தை கொண்டிருப்பதாக அமைச்சு கருதுகிறது.
இது தொடர்பில் கடந்த ஜூன் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை மலேசியா வரவேற்பதாக அது குறிப்பிட்டது.
ஈரான்-இஸ்ரேல் மோதலால் எண்ணெய் விலை உயரும், தொழில்துறை செலவு அதிகரிக்கும்
19 ஆகஸ்ட் 2025, 1:52 AM