தமிழர்களின் சமயம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளோடு இரண்டறக் கலந்தவை மண்பாண்டங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சுப துக்க நிகழ்வுகளிலும் மண்பாண்டங்களின் பங்கு இல்லாமலிருப்பதில்லை.
பொங்கல், கார்த்திகை உள்ளிட்ட விழாக்களின் நாயகனாக வலம் வந்து, நமது சமையலில் சுவை கூட்டும் இந்த மண் பாண்டங்கள்தான் நமது நிரந்த நித்திரைக்குப் பிந்தைய யாத்திரையில் உடன் வந்து இறுதிச் சடங்கை முடித்து வைக்கின்றன.

மேலோட்டமாகப் பாத்தால் மண்பாண்டத் தயாரிப்பு என்பது ஒரு தொழில். ஆழ்ந்து பார்த்தால் அது ஒரு கலை. சீராகச் சுழலும் பம்பரச் சக்கரம் மேல் குவிக்கப்படும களிமண் கைதேர்ந்தவர்களின் லாவகத்தால் அழகிய வடிவம் பெறுகிறது. எந்த அளவு கோலும் இல்லாமல் செய்யப்படும் அத்தனை பாத்திரங்களும் ஒரே அளவில் இருப்பது இதன் தனிச்சிறப்பு.
களங்கப்பட்ட கரங்கள் பட்டு புனிதம் பெறும் பாக்கியத்தை இந்த மண்பாண்டக் கலை களிமண்ணுக்கு வழங்கியிருக்கிறது.
பாரம்பரியக் கலைகளில் ஒன்றான இந்த மண்பாண்டத் தயாரிப்புத் தொழில் நவீன வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் மெல்ல மெல்ல மறைந்து வருவது வேதனைக்குரிய விஷயம்.
நாடு முழுவதும் எட்டு பேர் மட்டுமே இந்த மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் வேளையில் அவர்களில் நால்வர் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்றன.
அவர்களில் ஒருவர்தான் கோல சிலாங்கூர், புக்கிட் ரோத்தான் பகுதியில் மூன்றாவது தலைமுறையாக இந்த மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் வி. ராமதாஸ் (வயது 73).

கடினமான, யாராலும் கவனிக்கப்படாத இந்த தொழில்தான் ராமதாஸை அனைவருக்கும் அறிமுகமானவராக, அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றவராக, சுற்றுலா முகவராக, வெளிநாடுகளில் கால்பதிக்கும் வாய்ப்பை பெற்றவராக உருவாக்கியுள்ளது.
இந்த மண்பாண்டத் தொழில் உருவான விதம், அதன் வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் விரிவாக விவரிக்கிறார் ராதாஸ்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட என் தந்தை வெங்கடாசலம் 1930ஆம் ஆண்டு சஞ்சிக் கூலியாக மலேசியா வந்தார். ஜோகூர் கிம்மாசில் வேலை செய்த போது கடையில் மண்பாண்டங்களைப் பார்த்து அதனை எவ்வாறு செய்வது கற்றுக் கொள்ளும் நோக்கில் கோல சிலாங்கூர் வந்தார்.
எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்கள் இல்லாத அக்காலக்கட்டத்தில் கோல சிலாங்கூரில் மட்டும் மண்பாண்டத் தயாரிப்புத் தொழிலில் சுமார் 50 குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன. அப்போது மாதம் ஒன்றுக்கு 50,000 மண்சட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
அக்காலக்கட்டத்தில் கோல சிலாங்கூர் காண்டா மரக்காடாக இருந்தது. இங்கு நண்டுகளுக்கு பஞ்சமில்லை. மணலும் போதுமான அளவு இருந்தது. மேலும், இங்குள்ள மண் மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கு மிகவும் உகந்தவையாக இருந்தது.

அதனால்தான் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் கோல சிலாங்கூரைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த தொழிலின் வாயிலாகத் தான் எங்கள் தந்தை எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் படிக்க வைத்து கரை சேர்த்தார்.
நான் என் தந்தையிடமிருந்து இந்த கலையைக் கற்றுக் கொண்டு 1978ஆம் ஆண்டு இந்த தொழிலை சுயமாக ஆரம்பித்தேன். இதனை நாங்கள் குடும்பத் தொழிலாக மேற்கொண்டு வருகிறோம். இந்த மண்பாண்டத் தயாரிப்புக்கு தேவையானவை மண்ணும் மணலும் நீரும் மட்டுமே.
கடந்த 2000ஆம் ஆண்டு அப்போது கிராம மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக இருந்த டத்தோ ஜி.பழனிவேல், இந்த மண்பாண்டத் தயாரிப்பு தொழிலுக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். அவரின் முயற்சியால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நவீனமயமாக்கலின் வாயிலாக மண்ணை கலப்பதற்கு இயந்திரங்களையும் பாண்டங்களை சூடுபடுத்துவதற்கு எரிவாயுவினால் இயங்கக்கூடிய அடுப்புகளையும் பயன்படுத்த தொடங்கினோம்.
அதன் பிறகு கைவினைப் பொருள் துறையினர் எங்களின் மண்பாண்டத் தயாரிப்பு முறையை நேரில் பார்வையிட்டு சுமார் ஒரு லட்சம் வெள்ளி செலவில் பட்டறையை உருவாக்கித் தந்ததோடு எரிவாயு அடுப்பையும் வழங்கி உதவினர்.
இந்த தொழிலின் வாயிலாக அரசாங்கத்திடமிருந்து விருதுகளை வாங்கியுள்ளேன். அதே சமயம் மற்றவர்களுக்கும் இக்கலையைக் கற்றுத் தருவதற்காக அரசாங்கம் மானியமும் வழங்கியது.
இது கஷ்டமான தொழில் என்பதால் நமது மக்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது இந்த தொழில் அச்சு வந்து விட்டது. சுலபமாக அதிக பொருள்களை எளிதாக தயாரிக்க முடியும் என்பதால் இந்த பாரம்பரிய முறையை யாரும் விரும்புவதில்லை.
இங்கு நாங்கள் மண்சட்டி, தூபக்கால், குடம் ஆகியவற்றோடு வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்திலும் பாத்திரங்களைச் செய்து தருவோம். இப்போது சீனாவிலிருந்து விதவிதமான பாத்திரங்கள் வந்து விட்டன. ஆகவே மண்பாண்டங்களுக்கு மவுசு குறைந்து விட்டது.

மண் பானைகளுக்கு தேவை அதிகமாக உள்ள பெருநாள் என்றால் அது பொங்கல்தான். 90ஆம் ஆண்டுகள் வரை பொங்கலின்போது 50,000 பானைகளை விற்று வந்தோம். ஆனால், இப்போது 1,000 பானை கூட விற்பது கூட சிரமமானதாக உள்ளது. இப்போது பலருக்கு மண் சட்டி என்றால் என்னவென்றுகூட தெரியவில்லை.
இத்தகைய சவால்களைச் சமாளிக்கும் வகையில் என் மகன் ஆர்.வேலவர் நவீன முறையில் துளசி மாடம், தண்ணீர் பாத்திரம் உள்ளிட்ட பொருள்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்போதெல்லாம் பாத்திரங்களை விட வீட்டு அலங்காரப் பொருள்களுக்குதான் அதிக வரவேற்பு உள்ளது.
இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் சடங்குகளுக்குப் பயன்படும் சில பாத்திரங்களுக்கு தேவை அதிகமாக உள்ளது, இவற்றை இந்தியர்கள் மட்டுமின்றி மற்ற இனத்தினரும் வாங்கிச் செல்கின்றனர்.
எங்கள் தயாரிப்பு பொருள்களை 2005ஆம் ஆண்டு வரை சொந்த லோரியில் நாடு முழுவதும் சென்று வியாபாரம் செய்து வந்தோம். ஆனால் இப்போது என் மகன் இணையம் மற்றும் நேரடி வாடிக்கையாளர்களின் மூலம் வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
நான் டூரிசம் சிலாங்கூர் சுற்றுலா அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ளேன். அதன் வாயிலாக மண்பாண்டத் தொழிலின் நுணக்கத்தை தெரிந்து கொள்ள அவ்வப்போது சுற்றுப்பயணிகள் வருவர்.
டூரிசம் மலேசியா ஏற்பாட்டில் 2000ஆம் ஆண்டு என்னை லண்டனுக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ள மண்பாண்டத் தொழிலிலின் வளர்ச்சியை நேரில் காண்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தனர்.

நாங்கள் தயாரிக்கும் மண் பாத்திரங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் மீது சோதனை நடத்திய சிரிம் எனப்படும் மலேசிய தர நிர்ணயக் கழகத்தினர் பாத்திரங்களில் இரசாயனம் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
தலைநகரில் உள்ள கைவினைப் பொருள் காட்சிக்கூடத்தில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கைவினைப் பொருள் கண்காட்சியில் பங்கு கொண்டு வருகிறேன். நாடு முழுவதுமிருந்து கைத்தொழில் கலைஞர்கள் பங்கு கொள்ளும் இந்த கண்காட்சியில் ஒரே இந்தியன் நான் மட்டுமே.
நாட்டில் 50 குடும்பங்கள் இருந்தன. இப்போது எட்டு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் படித்த உயர் பதவிகளுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆகவே, எதிர்காலத் தலைமுறையினருக்காக இத்தகைய மண்பாண்டங்களை காட்சிபடுத்தக்கூடிய காட்சிகூடத்தை அமைப்பது எனது திட்டமாக உள்ளது என ராமதாஸ் குறிப்பிட்டார்.