சிகிஞ்சான், ஆக. 18 - கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட தாமான் ரியா குடியிருப்பைச் சேர்ந்த 52 பேர் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் வாயிலாக மொத்தம் 39,500 வெள்ளியை உதவி நிதியாகப் பெற்றனர்.
அப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சபாக் பெர்ணம் மாவட்ட மற்றும் நில அலுவலகம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 300 வெள்ளி உதவித் தொகையை விநியோகித்ததாக சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் பேரிடர் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் ஆரம்ப நன்கொடைகள் உடனடியாக விநியோகிக்கப்பட்டன. இன்று வழங்கப்படுவது முந்தைய உதவிகளின் தொடர்ச்சியாகும்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் நிலை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த உதவி அவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள தாமான் ரியா, டேவான் சிகிஞ்சானில் புயல் பேரிடர் நிவாரண நிதி ஒப்படைப்பு நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இதற்கிடையில், சிலாங்கூரில் பேரிடர்களைச் சமாளிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த நிதி விநியோகிக்கப்பட்டது என்று எம்.பி.ஐ. அறக்கட்டளையின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.
எம்.பி.ஐ. அறக்கட்டளையிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 500 வெள்ளி வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை பழுதுபார்க்கவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நன்கொடை உதவும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
இதுவரை மொத்த ஒதுக்கீட்டில் ஏறக்குறைய 600,000 வெள்ளி நாடு முழுவதும் பல்வேறு பேரிடர் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டது.
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்கள் அதிக அளவில் உதவியைப் பெற்றனர் என்றார் அவர்.