ஷா ஆலம், ஆக. 18 - சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியே முதுகெலும்பாக விளங்குவதாகக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
சமூக முன்னேற்றத்திற்கும் வாழ்க்கை நிலை உயர்விற்கும் கல்வியே முக்கியக் கருவி என மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பெரிதும் நம்புகிறேன்.
இதுபோன்றத் திட்டங்கள் கல்வி அறிவைப் பரப்புவதோடு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளவும் உதவுகின்றன என அவர் தெரிவித்தார்.
கல்வியை எப்போதும் முன்னுரிமை அளிக்கும் துறையாகக் கருதி இதுபோன்ற கல்வி சார்ந்த முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அவர்களின் வெற்றியே எங்களின் வெற்றி. ஆகையால், கல்வியில் முதலீடு செய்வது நாடுக்கான சிறந்த முதலீடாகும் என்றார் அவர்.
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் ஷா ஆலம் மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (எம்.எஸ்.யு.) வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2025 ஆண்டிற்கான “எஸ்.பி.எம்" அடிப்படை கல்வி கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் எஸ்.பி.எம். தேர்வுக்கான நான்கு முக்கிய பாடங்களான மலாய் மொழி, கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு மீது கவனம் செலுத்தப்பட்டது.
மாணவர்கள் வரும் தேர்வுக்குத் தங்களை சிறப்பான முறையில் தயார்படுத்தும் நோக்கில் இந்த
கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கருத்தரங்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கலந்து கொண்டு வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் முறைகள், திறமையான கற்றல் உத்திகள் மற்றும் முக்கிய குறிப்புகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கோத்தா கெமுனிங் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வியே முதுகெலும்பு - சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வலியுறுத்து
18 ஆகஸ்ட் 2025, 2:29 AM