ஷா ஆலம், ஆக. 16- அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும் சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிக்கான (சுக்மா) அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளராக மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (எம்.எஸ்.எஸ்.பி ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மீடியா சிலாங்கூரைத் தவிர, ஆஸ்ட்ரோ, டிவி சரவாக் (டிவிஎஸ்), எஸ்.ஜி.டி.வி. மற்றும் அர்கிவா யுகே ஆகிய நான்கு ஊடக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமாகச் செயல்படும் மீடியா சிலாங்கூர் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் துணை நிறுவனமாகும்.
முன்னதாக, நேற்றிரவு இங்கு நடைபெற்ற சுக்மா சிலாங்கூர் 2026 சின்னத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமியுடன் இணைந்து அதிகாரப்பூர்வ விளையாட்டு ஒளிபரப்பு பங்கேற்பாளர்களிடம் சின்னத்தின் அட்டையை வழங்கினார்.
அதே நிகழ்வில், அதிகாரப்பூர்வ கூட்டு ஏற்பாட்டாளர்களான கோரிடோர் யுடிலிட்டி சிலாங்கூர் (குசெல்) மற்றும் ஒளிபரப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை ஏபெக் ஆகியவற்றுக்கு சுக்மா சின்னத்தின் பதாகைகளையும் மந்திரி புசார் வழங்கினார்.
இதற்கிடையில், இந்த 22வது விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்கான அதிகாரப்பூர்வ இடமாக விளங்கும் பெட்ரோனாஸ் சிப்பாங் அனைத்துலக தடம் (பெட்ரோனாஸ் எஸ்.ஐ.சி.) விவேக பங்காளியாக நியமிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி மனறங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு கூட்ட பங்காளிகளாக நியமிக்கப்பட்டுள்ளன.
சுக்மா சிலாங்கூர் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக மீடியா சிலாங்கூர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தேர்வு
16 ஆகஸ்ட் 2025, 4:09 AM