ஷா ஆலம், ஆக. 16- அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் மலேசியா விளையாட்டுப் போட்டிகளுக்கான (சுக்மா) சின்னமாக வெள்ளை கழுகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது .
கடந்த 1998 ஆம் ஆண்டு சுக்மா போட்டியை சிலாங்கூர் ஏற்று நடத்தியபோதும் சிலாங்கூரின் சின்னமாக வெள்ளை கழுகு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் சுக்மா வெளியீட்டு விழாவின்போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த கழுகு சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
சிலாங்கூர் மீண்டும் இப்போட்டியை நடத்துவதைக் கொண்டாடும் வகையில் ஜோதி வடிவிலான XXII ரோமானிய எண் அதிகாரப்பூர்வ சுக்மா சிலாங்கூர் 2026 சின்னமாக வெளியிடப்பட்டது.
"நமது தாளம், நமது செயல்' என்ற கருப்பொருளையும் சிலாங்கூர் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.
இதற்கிடையில் சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் அதிகாரப்பூர்வ இடமான பெட்ரோனாஸ் சிப்பாங் அனலத்துலக பந்தயத் தடம் (பெட்ரோனாஸ் எஸ்ஐசி) இப்போட்டிக்கான விவேக பங்காளியாக நியமிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள 12 உள்ளூர் அதிகாரிகளும், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட, உள்கட்டமைப்பு பங்காளிகளாக நியமிக்கப்பட்டனர்.
ஆஸ்ட்ரோ, டிவி சரவாக் (டிவிஎஸ்), எஸ்ஜிடிவி மற்றும் அர்கிவா யுகே ஆகியவற்றுடன் மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் அதிகாரப்பூர்வ விளையாட்டு ஒளிபரப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டன.