ஷா ஆலம், ஆக 15 - முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் மகன் மீது நேற்று முன்தினம் பேரங்காடி வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சித் தலைமைத்துவ மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸியின் குடும்பத்தினர் மீதான இந்த தாக்குதல் மனிதாபிமானமற்ற செயலாகக் கருதப்படுவதோடு அவ்வாறு செய்திருக்கவும் கூடாது என்று அதன் தகவல் தலைவர் சைபுடான் ஷாபி முகமது கூறினார்.
இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது. அமைதியான மற்றும் நல்லிணக்கமான நாட்டில் எந்தவொரு குடிமகனுக்கும் இத்தகைய சம்பவம் நடக்கக்கூடாது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத நபர் தன் மகனை இழுத்துச் சென்று சிரிஞ்சை உடலில் செலுத்தியதாக ரபிஸி நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று காலை தன் மனைவிக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியின் பயணிகளை ஏற்றி இறக்கும் பகுதியில் பிற்பகல் 2.00 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தாய் மற்றும் வாகன ஓட்டுநருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான விசாரணை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.