தாவாவ், ஆக. 14 - இங்குள்ள ஜாலான் அபாஸ், கம்போங் பத்து 4 இல் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விருந்துக்குப் பிறகு நச்சுணவு பாதிப்பு காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்தது குறித்து காவல்துறை தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இறந்தவர்களின் 24 வயது உறவுக்கார பெண் ஒருவர் காலை 10.30 மணிக்கு புகார் செய்ததாக தாவாவ் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சாம்பின் பியூ தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கிராமத்தில் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட பிறகு தனது 36 வயது அத்தை மற்றும் ஒன்பது வயது மூத்த மகன் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என அவர் கூறினார்.
கணவரின் அறிக்கையின்படி, தனது மனைவி விருந்திலிருந்து சில உணவு வகைகளை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். அதை உண்ட பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள் மாலை வரை வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
உணவு நச்சுத்தன்மைக்கான சரியான காரணத்தை சுகாதார அமைச்சு இன்னும் ஆராய்ந்து வரும் அதே நேரத்தில் போலீஸ் தடயவியல் குழுவும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக சாம்பின் மேலும் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன அதில் காயத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
திருமண விருந்தில் நச்சுணவு பாதிப்பினால் இருவர் பலி - போலீஸ் விசாரணை
14 ஆகஸ்ட் 2025, 10:10 AM