கோலாலம்பூர், ஆக. 14 - இங்கு மேற்கொள்ளப்பட்ட ஓப் சோஹோர் நடவடிக்கையின் போது கடத்தல் கும்பலில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் மூளையாக செயல்பட்டவர் என நம்பப்படுகிறது.
அரச மலேசிய போலீஸ்படையின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த உண்மை அம்பலத்திற்கு வந்தது.
அந்த அதிகாரி குற்றவாளிகளுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டது மட்டுமல்லாமல் கடத்தல் நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர்களின் 2025 வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஓப் சோஹோர் நடவடிக்கையில் 30 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று ராணுவ அதிகாரிகள், இரண்டு முன்னாள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு இந்தோனேசிய குடிமகன் உட்பட 10 நபர்கள் செய்யப்பட்டதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஒரு வருட கால விசாரணையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் 63,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம், போதைப்பொருள் பொட்டலங்கள், எடை மற்றும் அளவிடும் உபகரணங்கள், மதுபானம் மற்றும் போலி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், இச்சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
கைதான சந்தேக நபர்களில் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஒரு இராணுவ அதிகாரி, ஒரு உள்ளூர் ஆடவர் மற்றும் இரண்டு வெளிநாட்டு பெண்கள் அடங்குவர் என்றார் அவர்.
ஓப் சோஹோர் நடவடிக்கையில்இராணுவ அதிகாரி கைது
14 ஆகஸ்ட் 2025, 9:58 AM