கோலாலம்பூர், ஆ 14 - முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் மகன் மீது நேற்று மாலை புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் இரண்டு நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போலி பதிவு எண்களைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவு எண்களைப் ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை தமது துறை தீவிரமாகக் தேடி வருவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு நபர்கள் என இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் சந்தேக நபர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊசியில் அடங்கிய திரவத்தை அடையாளம் காண்பது உட்பட போலீசார் இன்னும் விசாரணைகளை நடத்தி வருவதாக ஷாசெலி கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் உள்ள பயணிகளை ஏற்றி இறக்கும் பகுதியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுவன் என்றும் சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ஷாசெலி கூறினார்.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்வது உட்பட விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ரபிஸி மகன் மீது தாக்குதல் - சந்தேக நபர்கள் போலி வாகன எண் பட்டையைப் படுத்தியது கண்டுபிடிப்பு
14 ஆகஸ்ட் 2025, 9:51 AM