ஷா ஆலம், ஆக. 14 - மலேசியாவில், படிக்கும் போதும் வாழ்கையிலும் ஏமாற்றமடைந்ததால் நேற்று காஜாங்கில் ஒரு வெளிநாட்டுப் பெண் மூர்க்கத்தனமாக நடந்து பொதுமக்களைக் காயப்படுத்தியுள்ளார்.
பொதுப் பல்கலைக்கழக மாணவியான அவர், சம்பவத்திற்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
அம்மாது மருந்து உட்கொண்டதாக அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக எந்த பதிவுகளும் இல்லை. ஆனால் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகளால் அவர் மன அழுத்தப் பாதிப்பில் இருப்பதாகத் தெரிகிறது. உண்மையான காரணத்தை அடையாளம் காண மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபரான அப்பெண், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நஸ்ரோன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் உட்பட 11 சாட்சிகளிடமிருந்து போலீசார் இதுவரை வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருக்கும் வேளையில் அவர்கள் இன்னும் வார்டில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நேற்று காலை 11.58 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காஜாங் நகரில் உள்ள ஒரு பேரங்காடிக்கு அருகில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில் 24 வயது பெண் பொதுமக்களை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் பொதுமக்களின் உதவியுடன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்தி பொது மக்களைத் தாக்கியப் பெண் மன அழுத்தத்தால் பாதிப்பு
14 ஆகஸ்ட் 2025, 9:05 AM