கோலாலம்பூர், ஆக. 14 - முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் மகன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலிடம் தாம் தெரிவித்ததாக அன்வார் கூறினார்.
பள்ளிகளில் நிகழும் பகடிவதை சம்பவங்களிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. இச்சூழலில் மிகவும் வருந்தத்தக்க மற்றொரு செயல் வெளிப்பட்டுள்ளது.
ரபிஸி ரம்லியின் மகனுக்கு எதிரான தீய மற்றும் துரோக முயற்சி இதுவாகும் என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.
ரபிஸி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தாம் பிரார்த்தனை செய்வதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்த்தார்.
ரபிஸியின் மகன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் எந்தவொரு தரப்பினரின் அந்தஸ்து அல்லது பின்னணியை பார்க்காமல் நியாயமாகவும் சட்டத்தின் படியும் நடத்தப்படும் என்று சைபுடின் நேற்று ஓர் அறிக்கையில் உறுதியளித்தார்.
இந்த சம்பவத்தை உள்துறை அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்துவதற்காக முழுமையான விசாரணை நடத்த அரச மலேசிய காவல்துறைக்கு உத்தரவிடப்படுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரின் மகன் தாக்கப்பட்டதை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் உறுதிப்படுத்தினார்.