கோலாலம்பூர், ஆக. 13 - இளம் தொழில்முனைவோர் குறிப்பாக இந்திய இளைஞர்கள் டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் ஈடுபடுவதற்கு உதவும் வகையில் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் தொடக்க நிறுவன நிதியை உருவாக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொடக்க நிறுவனங்களுக்காகப் பொருளாதார அமைச்சு 1 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ள நிலையில் இதரத் துறைகளுக்கு பிரத்தியேக நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை என்று சிகாமாட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
தற்போதுள்ள நிதியை தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்னிடம் கூறப்பட்டது. இளைஞர்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு உதவும் நோக்கில் வியூக பங்காளித்துவ ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற பல பட்டதாரிகள் உள்ளனர். எனினும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் இல்லை. இதன் காரணமாக அவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று அவர் கூறினார்.
மக்களவையில் இன்று 13வது மலேசியத் திட்டம் தொடர்பான தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிதியின் வாயிலாக இளம் தொழில்முனைவோர் டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் ஈடுபட்டு நாட்டின் மேம்பாட்டிற்கு பங்களிப்பை வழங்க முடியும் என்றார் அவர்.