கோலாலம்பூர், ஆக. 13 - நான்கு மாதங்களுக்கு முன்பு நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான பதிவை முகநூலில் வெளியிட்டதற்காகப் பாதுகாவலர் ஒருவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் 5,000 வெள்ளி அபராதம் விதித்தது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ரமேஷ் முனியாண்டி (வயது 57) என்பவருக்கு நீதிபதி நோர்மா இஸ்மாயில் இத்தண்டனையை விதித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஐந்து மாத சிறைத்தண்டனையும் அனுபவிக்க உத்தரவிட்டார்.
அபராதத்தைத் தொகையை ரமேஷ் செலுத்தினார்.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி காலை 10.20 மணிக்கு "ரமேஷ் முனியாண்டி" என்ற முகநூல் கணக்கில் பிறரை புண்படுத்தும் நோக்கத்துடன் தெரிந்தே கருத்தை உருவாக்கி பதிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பதிவு பின்னர் 4வது மாடி, புளோக் ஏ, புத்ராஜெயா இஸ்லாமிய வளாகம், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், பிரிசிண்ட் 3, புத்ராஜெயாவில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பார்க்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்கும் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றம் நீடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படுவதற்கும் வகை செய்யும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(a) வது பிரிவின் கீழ் ரமேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முன்னதாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி.) விசாரணை அதிகாரி முகமட் பர்ஹான் கமாருடின், குற்றத்தின் தீவிரம் கருதி கடும் தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் பதிவை முகநூலில் வெளியிட்ட பாதுகாவலருக்கு அபராதம்
13 ஆகஸ்ட் 2025, 10:00 AM