பந்திங், ஆக. 13 - மோரிப்பில் கைவிடப்பட்ட சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்திற்கு புத்துயிரூட்டுவது அவசியம். எனினும், அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
ஒரு வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டால் அதனை மீட்பதற்கு ‘வைட் நைட்‘ எனப்படும் காப்பாற்றும் விருப்பம் கொண்ட மற்றும் ஆற்றல் கொண்ட ஒரு நிறுவனம் தேவை. எனினும், அத்தகையத் திறனை எல்லா நிறுவனங்களும் கொண்டிருப்பதில்லை என்று அவர் கூறியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
மோரிப் வீடமைப்புத் திட்டம் மிகவும் சிக்கலானது எனக் கூறிய அமிருடின், அதற்கு மாநில அரசிடமிருந்து விரிவான தீர்வு தேவை எனத் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை முடித்துக் கொடுங்கள் என யாரிடமாவது கூறுவது போன்றதல்ல இந்த பிரச்சனை. இதன் அசல் மேம்பாட்டாளர் திவாலாகி விட்டார். இந்த திட்டத்தைச் சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து தொடரக்கூடிய அளவுக்கு திறனும் நிதி ஆற்றலும் கொண்ட மேம்பாட்டாளர் கிடைப்பது மிகவும் சிரமம்.
இப்போது எங்களின் நோக்கம் எல்லாம் இந்த திட்டத்தை எடுத்து முழுமையாக முடிக்கக் கூடிய மேம்பாட்டாளரைக் கண்டுபிடிப்பதுதான் என அவர் சொன்னார்.
இதில் முக்கியமானது என்னவென்றால், இத்திட்டத்தில் வீடு வாங்கிய சிலர் வங்கியில் கடன் பெற்றுள்ளதோடு முன்பணமும் செலுத்தியுள்ளனர் என்பதை திட்டத்தை கையில் எடுக்கும் நிறுவனம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
திட்டத்தை எடுக்கும் புதிய நிறுவனம் முன்பண இழப்பு உள்ளிட்ட சுமைகளை ஏற்க மறுத்தால் அது நியாயமற்றதாகி விடும் என அவர் கூறினார்.
அந்த நிலம் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் தீர்வுக்கான வழிவகைகளை மாநில அரசு ஆராய்ந்து வருவதாகவும் அமிருடின் தெரிவித்தார்.