கோலாலம்பூர், ஆக. 13 - வருமான வரியைச் செலுத்த தவறுவோர் வெளிநாட்டிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படலாம் என்று உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் வருமான வசூல் துறையின் உதவி தலைமை இயக்குநர் அஸ்ஹாருடின் முகமது அலி கூறினார்.
கடைசி நேரச் சிக்கல்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க தங்கள் பயணத்தை திட்டமிடுவதற்கு முன்னர் பயணத் தடை தொடர்பான விபரங்களை மலேசிய குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது மைடெக்ஸ் செயலி வாயிலாக அறிந்து கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
வருமான வரி பாக்கி, நில சொத்துடைமை வருமான வரி அல்லது குறைந்தது 20 விழுக்காடு பங்குரிமை வைத்திருக்கும் இயக்குநர் நிறுவன வரி பாக்கி வைத்திருக்கும் உள்நாட்டினர் அல்லது உள்நாட்டினர் அல்லாத தனிநபர்கள் அல்லது நிறுவன இயக்குநர்களுக்கு இந்த பயணத் தடை அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
வரி பாக்கியைச் செலுத்தாத அல்லது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டப் பின்னரும் ஒத்துழைப்பு நல்காதவர்களுக்கு எதிராக 1967ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 104வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய பயணத் தடை நடவடிக்கைகளை வருமான வரி வாரியம் உடனடியாக எடுக்காது. மாறாக, நினைவுக் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
பயணத் தடையை அகற்றுவது குறித்து கருத்துரைத்த அஸ்ஹாருடின், வரி பாக்கியை முழுமையாகச் செலுத்தியப் பின்னரே தடை அகற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், வரி பாக்கியில் ஒரு பகுதி செலுத்தப்பட்டு எஞ்சியத் தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டப் பின்னர் பயணத் தடையிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்களிக்கப்படும் என்று அவர் சொன்னார்.