கோலாலம்பூர், ஆக.13 - மக்களவையில் நேற்று நடைபெற்ற 13வது மலேசிய திட்டம் மீதான விவாதத்தின் போது சுகாதாரப் பணியாளர் நலன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர்.
சுகாதார அமைச்சின் மருத்துவ மையங்களில் நிலவும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க மருத்துவர்கள் மத்தியில் ஒப்பந்த முறையை அரசாங்கம் அகற்ற வேண்டும் என்று பண்டார் கூச்சிங் உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி லீ முன்மொழிந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புறங்கள் அல்லது தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு விரைவில் நிரந்தர வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் சுகாதார அமைச்சு பணியில் புதிதாக நுழைந்தவர்களுக்கான ஒப்பந்த முறையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான ஆன்-கால் அலவன்ஸ் அதிகரிப்பை விரைவுபடுத்தவும் சிறப்பு ஒதுக்கீடுகள் மற்றும் ஊதியங்களை வழங்கவும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் சுகாதார அமைப்பு முறையில் குறிப்பாக இடமாற்றம், வேலை நேரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றில் முறையான மாற்றங்கள் தேவை என்று காப்பார் உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி தெரிவித்தார்.
மேலும், சுகாதார அமைச்சு மனிதவள அமைச்சு மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்தி இந்தத் துறையில் உள்ள பணியாளர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை பிரச்சனையை கோல பிலா தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அட்னான் அபு ஹாசன் கேள்வி எழுப்பினார்.
போதுமான மனிதவளம் இல்லாத பட்சத்தில் நவீன மற்றும் முழுமையான சுகாதார வசதிகளை முழு அளவில் பயன்படுத்த முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.