கோலாலம்பூர், ஆக. 12 - நாடு முழுவதும் ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டத்தின் அமலாக்கத்தை வலுப்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.
கடந்த 2023 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இந்த ரஹ்மா மடாணி மலிவு விற்பனைத் திட்டத்தை தரம் உயர்த்துவதற்கான முயற்சிகளில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதே இந்த கருத்துக் கணிப்பின் நோக்கமாகும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி இந்த வெள்ளிக்கிழமை வரை நடத்தப்படும் முதல் கட்ட கருத்துக் கணிப்பின் போது ரஹ்மா மடாணி மலிவு விற்பனை நடைபெறும் இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பெறுவதில் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
அதன் பிறகு அமைச்சின் வலைத்தளம் மற்றும் அனைத்து சமூக ஊடக கணக்குகளிலும் உள்ள இணைப்பு மூலம் அனைத்து மலேசியர்களும் தங்கள் கருத்துக்களை வழங்க அனுமதிப்போம் என்று அவர் இன்று மக்களவையில் நடந்த அமைச்சர்கள் கேள்வி நேர அமர்வின் போது கூறினார்.
ரஹ்மா மடாணி விற்பனை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற அமைச்சு பயன்படுத்தும் வழிமுறை குறித்து குளுவாங் தொகுதி ஹராப்பான் உறுப்பினரா வோங் ஷு கி எழுப்பிய துணைக் கேள்விக்கு ஆர்மிசான் இவ்வாறு பதிலளித்தார்.
ரஹ்மா மடாணி மலிவு விற்பனைக்கு 60 கோடி வெள்ளி அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு உண்மையில் இலக்கு தரப்பினரை சென்றடைவதை உறுதி செய்வதற்கான அமைச்சின் உத்தி குறித்த வோங்கின் மூலக் கேள்விக்கு பதிலளித்த அர்மிசான், அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தொகுதிகளிலும் ரஹ்மா மடாணி விற்பனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையில், ரஹ்மா மடாணி விற்பனையை செயல்படுத்த சிறப்பு கடைகள் அல்லது வளாகங்களை அமைச்சு திறக்காது என்றும் ஆர்மிசான் தெரிவித்தார்.
ரஹ்மா விற்பனையை வலுப்படுத்த மக்களிடம் கருத்துகள் பெற அமைச்சு நடவடிக்கை
12 ஆகஸ்ட் 2025, 9:03 AM