ஷா ஆலம், ஆக. 12 - சிலாங்கூர் மாநிலத்தில் வேப் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பான பரிந்துரையைத் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரை இறுதி செய்யப்பட்டு பரிசீலனை மற்றும் அடுத்தக்கட்ட முடிவுகளுக்காக விரைவில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
ஆய்வு முடிந்ததும் மின் சிகரெட்டுகள் அல்லது வேப் தடை குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமது அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
இந்தப் பரிந்துரை வேப் தடையை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் முடிவோடு மாநில அரசு தனது கொள்கையை இணைக்கும் என்று ஜமாலியா குறிப்பிட்டார்.
எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் விரிவானதாக இருப்பதை உறுதி செய்ய பொது சுகாதாரம், அமலாக்கம், கல்வி மற்றும் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்களிப்பாளர்களின் கருத்துக்களைப் பெறும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சையின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு சிலாங்கூரில் மின் சிகிரெட்டுகளை தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு பரிசீலித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஏப்ரலில் கூறியிருந்தார்.
இறுதிக் கட்டப் பரிசீலனையில் வேப் தடை மீதான பரிந்துரை- ஜமாலியா தகவல்
12 ஆகஸ்ட் 2025, 6:03 AM