புத்ராஜெயா, ஆக. 12 - மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அரியணை அமர்ந்து அடுத்தாண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சிறப்பு வாகன எண் பட்டை தொடரை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அறிமுகப்படுத்தவுள்ளது.
“SIS“ எனும் இந்த சிறப்பு வெள்ளி விழா எண் பட்டைகளுக்கான ஏலம் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஜே.பி.ஜே. அறிக்கை ஒன்றில் கூறியது.
சுல்தான் இட்ரிஸ் ஷா என்ற பெயரின் சுருக்கத்தைக் குறிக்கும் இந்த எண் பட்டை மாநிலத்தின் ஒன்பதாவது சுல்தானாகக் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வரும் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்படுகிறது என்று அது குறிப்பிட்டது.
இந்த பிரத்தியேக எண் பட்டைக்கான ஏலம் நடப்பிலுள்ள விதிமுறை மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றி Sistem JPJeBid என்ற இணைப்பின் வழி மேற்கொள்ளப்படும். ஏல முடிவுகள் வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அறிவிக்கப்படும்.
ஏலத்தில் பெறப்பட்ட அந்த பிரத்தியேக எண்களை ஏல முடிவுகள் வெளியிடப்பட்ட 12 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு வாகனத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஜே.பி.ஜே. வலியுறுத்தியது.
இதனிடையே, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொண்டாடப்படவிருக்கும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் 80வது பிறந்த நாளை முன்னிட்டும் இந்த பிரத்தியேக எண் பட்டை வெளியிடப்படுவதாக சிலாங்கூர் அரச அலுவலகம் கூறியது.