கோலாலம்பூர், ஆக. 12 - காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரம் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் மத்தியில் கண்டனம் வலுத்துள்ளது.
இந்த தாக்குதலில் அல் ஜசீரா செய்தியாளர்கள் அனஸ் அல்-ஷெரீஃப் மற்றும் முகமது குரைகியா உட்பட ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட வேளையில் மேலும் பலர் காயமடைந்ததாக அனைத்துலகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
காஸாவில் பத்திரிகையாளர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் நடப்பது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் "ஆழ்ந்த கவலை" அடைந்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். பல ஊடகவியலாளர்களின் உயிரைப் பறித்த அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமும் இந்தக் கொலையைக் கண்டித்துள்ளது. இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் "கடுமையான மீறல்" என்று அது கூறியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
மேற்கு காஸா நகரிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு கூடாரத்தை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7இல் போர் தொடங்கியது முதல் காஸாவில் குறைந்தது 242 பாலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அனைத்து பத்திரிகையாளர்களும் காஸாவுக்கு பாதுகாப்பாக மற்றும் தடையின்றி நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.
காஸாவில் ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலை - உலக நாடுகள் கண்டனம்
12 ஆகஸ்ட் 2025, 2:07 AM