கோலா பிலா, ஆக. 12 - இங்குள்ள ரெம்பாவ் நகரில் கடந்த மாதம் 11ஆம் தேதி பாகிஸ்தானிய பிரஜை ஒருவரிடம் கொள்ளையிட்டதாக குடிநுழைவுத் துறை ஊழியர் மீது நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் யூஸ்னா கதீஜா முகமது யூசோப் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டுவரப்பட்டக்
குற்றச்சாட்டை 38 வயதான முகமது நஸ்ருல் முகமது யாசின் மறுத்து விசாரணை கோரினார்.
அன்றைய தினம் மாலை 6.10 மணிக்கு ரெம்பாவ்வின் கம்போங் மிக்கு பிண்டாவில் அந்த பாகிஸ்தானியரிடம் ஒரு கைப்பேசி, கடப்பிதழ், 440 வெள்ளி ரொக்கம் மற்றும் 210 மதிப்புள்ள டச் 'என் கோ இ-வாலட் இருப்பை கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 392வது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த மாஜிஸ்திரேட் யூஸ்னா கதீஜா முகமட் யூசோப், இந்த வழக்கை கோலா பிலா செக்ஷன் நீதிமன்றத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செவிமடுக்க தேதி நிர்ணயித்தார்.
துணை அரசு வழக்கறிஞர் கோ சியாவோ துங் வழக்கை நடத்திய வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
பாகிஸ்தானியரிடம் கொள்ளை - குடிநுழைவுத் துறை ஊழியர் மீது குற்றச்சாட்டு
12 ஆகஸ்ட் 2025, 1:43 AM