கோல திரங்கானு, ஆக. 11 - இங்குள்ள மானிர், கம்போங் பாங்கோலில் கடந்த சனிக்கிழமை மரணமடைந்த ஒரு வயது 11 மாதம் நிரம்பிய ஆண் குழந்தை சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
அக்குழந்தையின் உடல் முழுவதும் வீக்கங்கள் காணப்பட்ட வேளையில் தலையில் இரத்தக் கசிவு இருந்தது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது என்று திரங்கானு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் கைரி கைருடின் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை நான்கு சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் சந்தேக நபர்களான அக்குழந்தையின் சொந்த தந்தை மற்றும் மாற்றாந்தாய், மருத்துவமனையில் அக்குழந்தையை கவனித்த மருத்துவர் மற்றும் தாதி ஆகியோரும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
இதுவரை நாங்கள் நான்கு சாட்சிகளின் வாக்கு மூலங்களை எடுத்துள்ளோம். இந்த சம்பவம் வீட்டில் நடந்துள்ளது. அந்த வீட்டில் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். அதாவது அக்குழந்தை, ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மூன்று வயது சகோதரர் ஆகியோரே அவர்களாவர் என்று அவர் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு ஜோகூரில் வசிக்கும் அக்குழந்தையின் சொந்த தாயிடமிருந்து தகவல்களை நாங்கள் பெறலாம். சந்தேக நபரின் வாக்குமூலத்தின்படி அந்த ஆடவரும் பெண்ணும் திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆகின்றன.
மேலும் அவர்கள் அண்டை வீட்டாருடன் கூட பழகவில்லை என்று இன்று திரங்கானு காவல் துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற திரங்கானு மாநில துணை போலீஸ் தலைவர் பதவி ஒப்படைப்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அந்நிகழ்வில் கோலாலம்பூர் போலீஸ் மேலாண்மைத் துறையின் முன்னாள் தலைவர் எஸ்ஏசி சஃபியன் சுலைமான் திரங்கானுவின் புதிய துணைக் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.