புத்ரஜெயா, ஆக. 11 - பகடிவதை துன்புறுத்தல், அவமதிப்பு மற்றும் இணையம் உள்ளிட்ட அடையாளத் தகவல்களை தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக அரசாங்கம் தண்டனைச் சட்டத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திருத்தம் 2025ஆம் ஆண்டு தண்டனைச் சட்டத்தின் (திருத்தம்) [சட்டம் A1750] மூலம் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் கூறினார்.
இந்த சட்டத் திருத்தம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரச ஒப்புதலைப் பெற்று மார்ச் 7ஆம் தேதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திருத்தத்தில் 507பி முதல் 507ஜி வரையிலான புதிய பிரிவுகள் அடங்கும். இவை பிறவற்றுடன், இணையம் உட்பட எந்தவொரு வகையிலும் அல்லது முறையிலும் செய்யப்படும் பகடிவதைப் பிரச்சனையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பகடிவதை , அச்சுறுத்தல்கள், கொடுமைப்படுத்துதல், அவமதிப்பு மற்றும் அடையாளத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல், தற்கொலைக்கு முயற்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் தூண்டப்பட்ட நபர் தற்கொலைக்கு முயல்வது அல்லது தூண்டுதலின் விளைவாக தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குற்றங்களை இந்தத் திருத்தம் உள்ளடக்குகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
ஆகவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.