கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 11 - கடந்த சனிக்கிழமை புஞ்சாக் ஆலமில் உள்ள எம்பிகேல் மண்டபத்தில் MYFutureJobs உடன் இணைந்து சிலாங்கூர் மாநில அரசால் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் ஆறாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் அவர்களின் கருத்தை மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் சிரம்பானிலிருந்து வருகை புரிந்த அரென்ரா ராஜ், இது போன்ற நடவடிக்கைகள் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பை வழங்குவதில் பெறும் துணைப்புரிவதாகத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கு பெறுவதனால், சிறந்த மற்றும் அதினமாக ஊதியம் வழங்கும் வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மக்களுக்கு பயனுள்ள இதுபோன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
அதே வேளையில் இந்த அரிய வாய்ப்பினை இந்தியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
அதுமட்டுமில்லாமல், வேலை வாய்ப்பு சந்தையில் இந்தியர்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது என கூறி வருத்தம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கிள்ளான் செந்தோசாவை சேர்ந்த பிரபு ஈஸ்வரன் என்பவரும் இந்த சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவலில் கலந்து கொண்டு பல நன்மைகள் அடைந்ததாக தெரிவித்தார்.

சுமார் 6 மாதங்களாக வேலை இல்லாமல் திண்டாடும் அவருக்கு இந்நிகழ்வை பற்றி தன்னுடைய அண்ணன் கூறியதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் பல வேலை வாய்ப்புகள் குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது என்றார். மேலும், இதன் மூலம் தனக்கு ஒரு நல்ல வேலை அமையும் என்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
தன்னை போல் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் குறிப்பாக இந்தியர்கள் மாநில அரசு ஏற்படுத்தி தரும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொண்டார்.
எனவே, சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் போன்ற பல நன்மைகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று வாழ்வின் தரத்தை உயர்த்தி கொள்ள முன்வர வேண்டும் என மீடியா சிலாங்கூர் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.