ஜோர்ஜ் டவுன், ஆக. 11- ஆயர் ஹீத்தாம், ஜாலான் பாயா தெருபோங்கில் மலைப்பாதை வளைவில் தொழிற்சாலை பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பேருந்தில் இருந்த 29 தொழிற்சாலை ஊழியர்களில் அறுவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் இன்று காலை 7.24 மணிக்கு தீயணைப்புப் படைக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு குழுவினர், சாலையின் மலைப்பாங்கான வளைவில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தொழிற்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதைக் கண்டனர்.
அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 30 பேர் இருந்தனர். இதில் ஆறு தொழிலாளர்கள் லேசான காயங்களுக்கு ஆளாகினர். தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு மீட்பு டெண்டர் இயந்திரம் மற்றும் அவசர மருத்துவ மீட்பு சேவை பிரிவு பயன்படுத்தப்பட்டதாக கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றார்.